ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 20 அக்டோபர், 2011

பரமக்குடி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை

பரமக்குடி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை
-
கடந்த 2011 செப்டம்பர் 11 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஜான் பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பரமக்குடியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் காவல்துறையினர் நடத்திய தடியடியிலும், துப்பாக்கிச் சூட்டிலும் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் கை, கால்களில் படுகாயங்களுடனும், துப்பாக்கி குண்டுகளுடனும், மதுரை இராஜாஜி அரசு பொது மருத்துவமனையிலும், பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
மதுரை சிந்தாமணியிலும் அதே நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு தலித் இளைஞர்கள் குண்டடிபட்டுள்ளனர். இச்செய்திகள் வெளியானதையொட்டி இச்சம்பவங்களின் உண்மை மற்றும் பின்னணி குறித்து விசாரிக்க மனித உரிமைகள் காப்பதில் ஆர்வம் கொண்ட வழக்குரைஞர்கள் மற்றும் களப் போராளிகள் அடங்கிய ஒர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, கடந்த 17.09.2011 மற்றும் 18.09.2011 ஆகிய தேதிகளில் பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன நபர்களின் கிராமங்களுக்குச் சென்றும், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களையும், பொதுமக்களையும், தொடர்புடைய அரசு அதிகாரிகளையும்  நேரில் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தது.

உண்மை அறியும் குழுவினர் :

1. சு. சத்தியச் சந்திரன் – வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
2. பெ. தமிழினியன் – வழக்குரைஞர்,
பொதுச்செயலாளர், அம்பேத்கர் மக்கள் விடுதலை இயக்கம்.
3. எஸ். நடராஜன் – தலைவர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பேரவை.
4. க. இளஞ்செழியன்- மாநில நிதிச் செயலாளர், ஆதித் தமிழர் விடுதலை இயக்கம்,
தமிழ்நாடு.
5. “தடா” து. பொ¢யசாமி – நந்தனார் பேரவை, பெரம்பலூர்.
6. யாக்கன் – பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாற்றுப் பத்திரிக்கையாளர்-எழுத்தாளர்
பேரவை, சென்னை.
7. R.L. ரொசாரியோ – தலித் மக்கள் மன்றம், திருவண்ணாமலை.
8. சா. ரஜினிகாந்த் – வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
9. E. தெய்வமணி – அமைப்பாளர், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்.
10. R. அழகுமணி – வழக்குரைஞர், மதுரை உயர்நீதிமன்றம்.
11. P. வேலுமணி – அமைப்பாளர், தமிழர் எழுச்சி இயக்கம், சென்னை.
12. R. அண்ணாதுரை – அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்.
13. கே. ஆறுமுகம் – சமூகநீதி, மதுரை.
14. சி. ஆனந்தராஜ் – சம உ¡¢மை, மதுரை
15. க. சீனிவாசன் – மையக்குழு உறுப்பினர், ஆதித் தமிழர் விடுதலை இயக்கம்,
தமிழ்நாடு
தென் தமிழகத்திலுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்துள்ளது. முன்னாள் இராணுவ வீரரான அவர் தனது பகுதியில் நிலவி வரும் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுத்ததால் 11.09.1957 அன்று ஆதிக்கச் சாதியனரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது நினைவு நாள் அப்பகுதி தலித் மக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆண்டு அவரது 50வது நினைவு நாள் மிகச் சிறப்பான முறையில் அனுசா¢க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நினைவு நாள் நிகழ்ச்சி மிகப்பெரும் மக்கள் திரளாக மாறிவருகிறது. தலித் மக்கள் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினரும் இந்நினைவு நாளில் கலந்துகொள்கின்றனர்.
அஞ்சல் தலை வெளியிடல்:
அப்பகுதியிலுள்ள தலித் மக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தொடர்ச்சியான கோ¡¢க்கையின் அடிப்படையில் கடந்த 09.10.2010 அன்று இந்திய அரசு, தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
கடந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், பரமக்குடி வந்த பங்கேற்ற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், “2011 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றால்… வெற்றி பெற வைத்தால்… இம்மானுவேல் சேகரின் நினைவு நாளை அரசு விழாவாக அம்மா அவர்கள் இங்கு வந்து அறிவிப்பார்கள்” என்ற உறுதிமொழியை அளிப்பதாகச் சொல்லி அது ஊடகங்களிலும் வெளிவந்துள்ளதாக மக்கள் தொ¢விக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புடனே 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு தலித் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் வாக்களித்துள்ளனர். அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின் இக்கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கடைசிவரை இந்த அறிவிப்பு அரசிடமிருந்து வரவில்லை.
-
நினைவேந்தல் நிகழ்ச்சி:
-
உண்மை அறியும் குழுவினர் சந்தித்த பல்வேறு தரப்பினர், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த பல ஆண்டுகளாக மிக அமைதியான முறையில் நடைபெற்று வந்துள்ளதாகவும், அஞ்சலி செலுத்த வரும் மக்கள் முளைப்பாறி, வேல் குத்துதல், காவடி தூக்குதல், பால்குடம் ஏந்துதல், கரகாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் என்றும், இந்நிகழ்விற்காக லட்சக்கணக்கானோர் கூடும்போதும்கூட எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை எனவும் ஒருமித்து கூறுகின்றனர்.
-

மாற்று சமூகப் பகைமை:
-
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் எதிரெதிர் அணிகளில் சமூக, அரசியல் தளங்களில் செயல்பட்டதால் இருசமூகத்தினரிடையே தீராப் பகைமை நிலவிவருவது அனைவரும் அறிந்ததே.

இந்தப் பின்னணியில், சமூக-பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வலிமை பெற்றுவரும் தலித் மக்களின் முன்னேற்றமும், அதனை நிரூபிக்கும் விதமாக இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுக்கு ஆண்டு முக்கியத்துவம் பெறுவதும் மாற்று சமூகத்தினரிடையே சலசலப்பையும் தங்கள் அதிகார எல்லை சுருங்கிவிடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி, அதன் பொருட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்கும் விதமாக நினைவேந்தல் நிகழ்விற்கு முன் கடந்த ஆண்டுகளில் கொலைகளை அரங்கேற்றியுள்ளனர் என்று உண்மை அறியும் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்குச் சான்றாக, கடந்த 2007 செப்டம்பரில் வீரம்பல் கிராமத்தைச் சார்ந்த குட்டி என்ற வின்சென்ட் சாம்சனை முதுகுளத்தூரில் அம்மாற்றுச் சமூகத்தினர் படுகொலை செய்தனர் என்றும் பின்னர் 2008ல் அதே முதுகுளத்தூரில் அறிவழகன் என்பவரும் கொல்லப்பட்டார் என்றும், 2010ம் ஆண்டு கொந்தகை கிராமத்தைச் சார்ந்த அரிகிருஷ்ணன் கொல்லப்பட்டார் என்றும், இச்சம்பவங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சில தினங்கள் முன்பாக நிகழ்த்தப்பட்டவை என்றும், அதன் மூலம் தலித் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை சிறப்புற நடத்துவதை தடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் நிகழ்த்தப்பட்டவை என்றும் அப்பகுதியில் செயல்படும் தலித் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக “குருபூசை” என்று குறிப்பிடப்படுவது மாற்று சமூகத்தினரான முக்குலத்தோர் மத்தியில் “குருபூசை” தங்கள் தலைவர் முத்துராமலிங்க தேவருக்கு மட்டுமே செய்யப்படவேண்டும் என்றும் அதற்குச் சமமாக வேறு எவரும் “குருபூசை” என்ற பெயரில் செய்யக்கூடாது என்ற எண்ணம் வலுவாக உள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், தியாகி இம்மானுவேல் சேகரனை “தேசியத் தலைவர் தெய்வத்திருமகனார்” என்று தலித் மக்கள் குறிப்பிடக்கூடாது என்றும் அந்த அடைமொழி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே குறிக்கும் என்று கூறி “மறத் தமிழர் சேனை” என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பரமக்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், 07.09.2011 அன்று காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கணேசன், காவல் ஆய்வாளர் திரு.சிவகுமார் தலித் தலைவர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து மேற்படி வாசகங்களை அச்சிடக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால், தலித் தரப்பினர் மேற்படி வாசங்களுக்கு எவருக்கும் “காப்புரிமையில்லை” என்று கூறி அதனை ஏற்கவில்லை.
இதன் பின்னர், 09.09.2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் மண்டலமாணிக்கம் கிராமம் பள்ளப்பச்சோ¢யைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற +1 படிக்கும் தலித் மாணவன் தனது நண்பனுடன் முத்துராமலிங்கபுரம் புதூ¡¢ல் நடைபெற்ற நாடகத்திற்கு சென்று திரும்பும் வழியில் நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் “டே பச்சேரிகாரங்களா நில்லுங்குடா” என்று கூறி வழிமறித்து “நீங்க குருபூஜைக்கு எப்படி போறீங்க என்று பார்ப்போம்” என்றபடியே தலையில் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.
தலித் மக்களின் மனமுதிர்ச்சி:
இந்த வகையில், இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பதற்றம் மிக்க ஒன்றாக மாற்ற மாற்று சமூகத்தினர் முன்முயற்சி எடுத்ததாக தலித் மக்கள் உணர்ந்தனர். எனினும், நினைவேந்தல் நிகழ்ச்சியை எவ்வித அசம்பாவிதமுமின்றி நடத்த தலித் மக்கள் முடிவெடுத்தனர். அதனடிப்படையிலேயே, 11.09.2011 அன்று நிகழ்வு நடைபெறவிருந்தது என்று உண்மை அறியும் குழுவினா¢டம் அப்பகுதி தலித் மக்கள் தெரிவித்தனர்.
நினைவேந்தல் நாளில் … :
11.09.2011 அன்று காலை முதலே மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தொடங்கினர். வழக்கமாக, அண்டை மாவட்டங்களான மதுரை, சிவகங்கையில் இருந்து வரும் மக்கள் பரமக்குடியிலுள்ள நினைவிடத்தில் மாலை 3.00 மணியளவில் மிகப்பெருமளவில் திரள்வர். முன்கூட்டியே காவல்துறையினரும் திரு.ஜான் பாண்டியன் மாலை 3.00 மணிக்கும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு மாலை 4.00 மணிக்கும் நினைவிடம் வர அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில், காலை சுமார் 10.30 மணியளவில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த திரு. ஜான் பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்செய்தி பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த தலித் மக்களிடம் 11.30 மணியளவில் பரவியுள்ளது. அப்போது பரமக்குடி நகரத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் “அஞ்சுமுனை ரோடு” எனப்படும் ஐந்து சாலைகள் சந்திப்பில் 100க்கும் குறைவான நபர்களே இருந்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அடையாறு காவல் துணை ஆணையர் திரு. செந்தில்வேலன், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கணேசன், பரமக்குடி காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆயுதங்களுடனும் தடுப்புக் கருவிகளுடனும் பெருமளவிலான எண்ணிக்கையில் இருந்துள்ளனர். கலவரத்தை அடக்கும் “வஜ்ரா” வாகனம் ஒன்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்துள்ளது.
கைதும் கோரிக்கையும்:
பெரும்பாலானோர் நினைவிடத்தை நோக்கி வாகனங்களிலும், நடந்தும் செல்லும்போது, ஒரு சிலர் இச்செய்தியை அறிந்து அங்கிருந்த காவல் அதிகா¡¢களிடம் திரு. ஜான் பாண்டியனை குறிப்பாக அன்றைய தினம் கைது செய்தது ஏன் என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் கோ¡¢யுள்ளனர். திரு. ஜான் பாண்டியன் கைது செய்யப்படவில்லை என்று முதலில் கூறிய காவல்துறை உயர்அதிகா¡¢கள், பின்னர் தூத்துக்குடி காவல்துறையினர்தான் கைது செய்தது என்றும், அது மேலிடத்தின் முடிவு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கைவி¡¢த்ததுள்ளனர். இது அங்கு குழுமிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த, அவர்களில் ஒரு சிலர் திரு. ஜான் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அமைதியான முறையில் முழக்கமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் எவருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத நிலையிலும், அங்கு திரண்டிருந்த மக்கள் அமைதியான முறையில் தங்களின் கோரிக்கையை முன்வைத்தபோதும், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் சுமார் 12.00 மணியளவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தடியடியும் உடனே துப்பாக்கிச்சூடும் காவல்துறையினர் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் மற்றும் 2 பேர் தடியடியிலும் இறந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவர்கள் 9 பேர்.
மதுரை-சிந்தாமணி அருகேயும் துப்பாக்கிச் சூடு:
அதேபோல், 11.09.2011 அன்று ஏறக்குறைய அதேநேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்திலிருந்து இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தலில் கலந்துகொள்ள பரமக்குடி நோக்கி லா¡¢யில் வந்துகொண்டிருந்த சுமார் 100 பேர் மதுரை சிந்தாமணி அருகே சுங்கச்சாவடியில் சுமார் 11.30 மணிக்கு நிறுத்தப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாங்கள் குருபூசைக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியவர்களை மதுரை அவனியாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. கஜேந்திரன் எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்களின்/பாதிக்கப்பட்ட நபர்களின் கூற்றுக்கள் :
1. V. வேலு, கீழ்கொடுமானூர், மேலக்கொடுமானூர் அஞ்சல், முதுகுளத்தூர் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் (சம்பவத்தில் இறந்த தீர்ப்புக்கனியின் தந்தை)
எனது மகன் தீர்ப்புக்கனி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு D.M.E. படித்து வந்தான். நானும் இம்மானுவேல் சேகரன் குருபூசைக்குப் போயிருந்தேன். எனக்கு முன்பே தீர்ப்புக்கனி பைக் மூலம் அங்கு சென்றுவிட்டான். திடீரென கலவரம் வந்தவுடன், எல்லோரும் ஒடி ஒளிந்தார்கள். நானும் ஒளிந்தேன். 4.30 மணியிருக்கும், பரமக்குடி டவுனை ஒட்டியுள்ள ரயில்வே கேட் அருகே, நான் ஒரு கடையில் ஒளிந்திருந்தேன். அப்போது தீர்ப்புக்கனி பைக் எடுக்க சென்றான். நீண்ட நேரமாகியும் அவன் வரவில்லை. அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு 10 மணிக்கு மேல் எனது மகன் தீர்ப்புக்கனி, இளையாங்குடி
ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார்கள். போலீஸ்காரர்கள், எனது மகன் தீர்ப்புக்கனியையும் செந்தில் என்ற இன்னொரு பையனை சரமா¡¢யாக அடித்து இழுத்துச் சென்றதாக கூறினார்கள். மாலை நானும் எனது இன்னொரு மகன் திருநாவுக்கரசும் இளையாங்குடி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்கிருந்து தீர்ப்புக்கனி மதுரைக்குக் கொண்டு சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அங்கிருந்து மதுரை வந்தோம். மதுரை ஆஸ்பத்தி¡¢யில், எனது மகன் துப்பாக்கி குண்டு பாய்ந்து கை, கால் எலும்புகள் நொறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தான். பார்த்து கதறி அழுதேன். சம்பவம் நடந்த அன்று 5 மணிக்குப் பிறகு போலீஸ் துப்பாக்கியால் சுட்டு எனது மகனை கொன்றிருக்க வேண்டும்.
2. ரபேக்கா, த/பெ. பன்னீர் செல்வம், வீரம்பல் கிராமம், முதுகுளத்தூர் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் (சம்பவத்தில் இறந்த பன்னீர் செல்வத்தின் மகள்)
எனது தந்தை காந்தி நகா¢ல் (பரமக்குடி) வசித்து வருகிறார். பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூசைக்கு எனது தகப்பனார் சென்றிருந்தார்.

நான் பரமக்குடி பொன்னையாபுரத்தில் திருமணம் செய்து அங்கேயே எனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மதியம் 12 மணிக்கு அப்பா என்னோடு பேசினார். பரமக்குடியில் அய்ந்து முக்கு ரோட்டில் போலீஸ் துப்பாக்கியில் சுட்டு நினைவிடத்திற்குச் செல்லவிடாமல் விரட்டியடிக்கின்றார்கள். என்றும், என்னை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சொன்னார்.
தர்மவேல், த/பெ. சடையன், சடையனோ¢ கிராமம், பரமக்குடி வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் (சம்பவத்தில் இறந்த முத்துக்குமரனின் ஊரைச் சார்ந்தவர் சம்பவ இடத்தில் இருந்தவர்)
நானும், முத்துக்குமாரும் குருபூசைக்குச் சென்றிருந்தபோது எனது அருகில் தான் முத்துக்குமார் இருந்தார். ஐந்து முனைச் சந்திப்பில், ஐம்பத்திலிருந்து நூறு பேருக்குள்ளாகத்தான் இருக்கும், ஜான் பாண்டியனை விடுதலைச் செய்யச் சொல்லி, கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே போனது. 9 ஆண்டுகள் கழித்து குருபூசைக்கு வருகிறார் ஜான் பாண்டியன், அவரை ஏன் கைது செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

ஞானப்பிரகாசம், சடையனோரி கிராமம், பரமக்குடி வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் (சம்பவத்தில் இறந்த முத்துக்குமரனின் தந்தை)

துப்பாக்கிச் சூடு நடந்த அன்று இரவு 10 மணிக்கு, முத்துக்குமார் உடல் இளையாங்குடி மருத்துவமனையில் உள்ளதாகவும், உடனே வந்து உடலை வாங்கிக் கொள்ளும்படியும் போனில் சொன்னார்கள். உடனே அங்கு ஓடினோம். அங்கு போய்ப் பார்த்தால் மதுரைக்குக் கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். இரவோடு இரவாக மதுரைக்கு வந்தோம். மறுநாள் காலையில்தான் உடலைப் பார்த்தோம். வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இடதுபுறம் வழியாக வெளியே வந்துள்ளது. கை, கால்கள் ரப்பரைப் போலக் கிடந்தன. எலும்புகளை அடித்து நொறுக்கியிருந்தார்கள். வாய் வழியே ரத்தம் வெளியேறிக் கிடந்தது. மதுரையிலிருந்து உடலை வாங்கிக் கொண்டுவந்து புதைத்தோம்.

காயத்திரி க/பெ. ஜெயபால், மஞ்சூர் கிராமம், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் (துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜெயபாலின் மனைவி)

பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்து அன்று காலையிலேயே குருபூசைக்குச் சென்றார் எனது கணவர். பதினோரு மணி இருக்கும். குருபூசைக்கு என்னையும் பரமக்குடி வரும்படி அழைத்தார். எனது அம்மா போகவேண்டாம் என்று சொன்னதால் நான் செல்லவில்லை. வரவில்லை என சொல்லிவிட்டு, அவரை சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடும்படியும் சொன்னேன். அதன்பிறகு போன் செய்யவில்லை. இரண்டு மணிக்கு நான் மறுபடியும் பேசினேன். அப்போது செல் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் மீண்டும் அழைத்தேன். இரவு 9.30 மணியிருக்கும் போலீஸ் எனது கணவரைக் கொன்று தூக்கிச் செல்வதை TVயில் காட்டுவதாகச் சொன்னார்கள். அந்த நேரத்தில், எனது கணவா¢ன் செல்போனிலிருந்து எனக்குப் போன் வந்தது. அதில் பேசிய ஒருவர் என்னிடம் விபரம் விசாரித்தார். நான் மனைவி என்று சொன்னேன்.
உடனே “ஸ்விட்ச் ஆப்” செய்துவிட்டார். பின்னர் மீண்டும் அவரே பேசி, பரமக்குடி காவல் நிலையத்திற்கு வரும்படி சொன்னார். போலீஸ் ஸ்டேசன் போனோம். எங்களை விசா¡¢த்துவிட்டு, பரமக்குடி பொது மருத்துவமனை போகச் சொன்னார்கள். அங்கு போய்ப் பார்த்தோம். அங்கிருந்து ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு போய்விட்டதாகக் கூறினார்கள். அங்கும் போய் கேட்டோம். “பாடியை” மதுரைக்கு கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். கடைசியில் இரவு 1 மணிக்கு, இளையாங்குடி அரசுப் பொது மருத்துவமனையில் உடல் இருப்பதாகச் சொன்னார். இரவு அங்கு போக பஸ் கிடைக்காததால், அங்கு போகமுடியவில்லை. கடைசியில் மறுநாள் காலையில், ராமநாதபுரம் அரசுப் பொது மருத்துவமனையில் உடலை பார்த்தோம்.
அப்போது போலீசார் வந்து த.மு.கழகத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவரிடம் செல்போனை கொடுத்து “ஜான் பாண்டியன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அவரது மனைவி பி¡¢சில்லா பாண்டியன் பேசுகிறார்” என்று கூறி செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை வாங்கி மலைச்சாமி பேசியபோது எதிர்முனையில் ஒருவர் “நான் கலெக்டர் பேசுகிறேன், மா¢யாதையா கூட்டத்தை கலைந்து போகச் சொல்லு. இல்லேனா முதல் குண்டு உனக்கு தா(ன்)” என்று பேசியிருக்கிறார்.
மலைச்சாமி அதனை கேட்டவுடன் சாலையோரம் சென்று விட்டார். நானும் உடனே அவருடன் ஒதுங்கிக் கொண்டேன். லத்திசார்ஜ் செய்யப் போகிறோம் என்று முன்னறிவிப்பு செய்யாமலேயே போலீஸ் திடீரென “லத்திசார்ஜ்” செய்தனர். எல்லோரும் சிதறி ஓடினோம். முத்துக்குமாரும் ஓடினார். அதன்பிறகு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. நான் தப்பித்து ஊர் வந்து சேர்ந்தேன்.
அதற்குப்பிறகு, மதியம் 2 மணிக்கு நான் அப்பாவை மதிய உணவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைத்து அவருக்கு போன் செய்தேன். அப்போது அவரது போன் “ஸ்விட்ச் ஆ•ப்” செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் மறுபடியும் அழைத்துப் பார்த்தேன். “லைன்” கிடைக்கவில்லை மாலை 7 மணிக்கு, என் அப்பா செல்போனிலிருந்து ஒருவர் என்னிடம் பேசினார். என்னைப் பற்றி விபரம் கேட்டார். ஏன் பொன்னையாபுரத்திற்கு வந்தீர்கள் எனறு கேட்டார். நான் அங்குதான் திருமணம் செய்துள்ளதாகக் கூறினேன்.
அப்போது, ராமநாதபுரம் மருத்துவமனையில், என் அப்பாவை வைத்துள்ளதாகச் சொல்லிவிட்டு மீண்டும் “ஸ்விட்ச் ஆ•ப்” செய்துவிட்டார். பேசியது யார் என்று கூட எங்களுக்கு அவர் சொல்லவில்லை. ராமநாதபுரம் மருத்துவமனையில் (உடற்கூறாய்வு) போஸ்ட் மார்ட்டம் முடித்து எனது தகப்பனார் உடல் இருந்தது.
நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பின்புறத்தலை வெடித்துச் சிதறிக் கிடந்தது. உடலை வாங்கி வந்து புதைத்தோம். “போலீஸ் ரெய்ட்” என்று சொல்லி ஒரே பதற்றமாக இருக்கிறது. மக்கள் எல்லோரும் காடுகரைகளில் ஒடிப் பதுங்குகிறார்கள்.
பாண்டி, மஞ்சூர், பரமக்குடி (ஜெயபாலின் தந்தை)
எனது மகன் ஜெயபாலைத்தான், போலீஸ் முதலில் சுட்டுக் கொன்றுள்ளது. எந்த வம்பு தும்புக்கும் அவன் போனதில்லை. சுட்டுக் கொன்று, கால்களை இருவர் பிடித்துக் கொண்டு, இடுப்பில் கட்டையை கொடுத்து இரண்டு போலீஸ்கார்கள் தூக்கி வருவதை TVயில் தான் முதலில் பார்த்தேன். அவன் போட்டிருந்த சிவப்புச் சட்டையை பார்த்தவுடன் அது எனது மகன் தான் என்பதை உறுதி செய்து கொண்டேன். ராமநாதபுரத்திற்கு 10ஆம் தேதி காலையில் சென்று, அரசு மருத்துவமனையில் இருந்த எனது மகன் உடலைப் பார்த்தேன். வலது பக்க மார்பில் துப்பாக்கிக் குண்டு துளைத்து, இடது பக்கமாக வெளிவந்திருந்தது. இடது பக்க முதுகிலும் துப்பாக்கிச் சூடு இருந்தது.
குண்டு பாய்ந்த இடத்தை நான் தொட்டுப் பார்த்தபோது, சதை பிய்ந்து வெளியே வந்தது. வலது தொடையில், துப்பாக்கியின் பின்புற கைப்பிடிக்கட்டையில் அடித்திருக்கிறார்கள். எனது மகன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கழட்டிக் பார்த்தோம் தொடை வெள்ளரிப்பழம் பிளந்ததுபோல் மூன்று பாளமாகப் பிளந்து கிடந்தது. வெள்ளை சதை வெளியே தொ¢யும்படி உடலைச் சிதைத்திருந்தார்கள். எனது மகனை அடித்தக் கொன்று, பின்னர் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். உடலை வாங்கிக் கொண்டுவந்து புதைத்துள்ளோம். இன்னமும் போலீஸ் விரட்டுகிறது. நான் பையனைப் பறி கொடுத்துவிட்டு, போலீசுக்குப் பயந்து ஓடுகிறேன். நிம்மதியாக வாழ முடியவில்லை.
ரேவதி, மஞ்சூர், பரமக்குடி (ஜெயபாலின் மாமியார்)
எனது மருமகன் பரமக்குடியிலிருந்து போன் பண்ணும் போது காலை 11.00 மணி இருக்கும். அவர் பேசும்போது ஒரே சத்தமாக இருந்தது. போனை வாங்கி நான் பேசினேன். உடனே திரும்பி வந்துவிடும்படி சொன்னேன். அவரும் வந்துவிடுவதாகத்தான் சொன்னார். அதற்குப் பிறகு அவரது போன் “ஸ்விட்ச் ஆ•ப்” ஆகிவிட்ட பிறகு அவரை எங்கு பிடித்து, எப்படிக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. என் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
8. மங்களேஸ்வரி, க/பெ. சண்முகம், காக்கனேந்தல், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் (துப்பாக்கிச் சூட்டில் பலியான வெள்ளைச்சாமியின் அண்ணி).
அவர் (வெள்ளைச்சாமி) குருபூசைக்கு செல்வதற்காக பரமக்குடியில் போகவில்லை. எங்கள் உறவினர் திருமணத்திற்காக மதுரைக்குப் போகத்தான், பரமக்குடி வந்தார். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாலை 4.30 மணி இருக்கும். பரமக்குடி வந்து எனக்கு போன் பண்ணினார். பரமக்குடி வந்திருப்பதாகவும், திருமணத்திற்கு வரும்படியும் என்னிடம் சொன்னார். நான், சமையல் வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை பரமக்குடியிலேயே இருக்கும்படி சொன்னேன். மீண்டும், வெள்ளைச்சாமி போன் பண்ணி, பரமக்குடியில் இரண்டு பேரை போலீஸ்
ரேவதி, மஞ்சூர், பரமக்குடி (ஜெயபாலின் மாமியார்)
எனது மருமகன் பரமக்குடியிலிருந்து போன் பண்ணும் போது காலை 11.00 மணி இருக்கும். அவர் பேசும்போது ஒரே சத்தமாக இருந்தது. போனை வாங்கி நான் பேசினேன். உடனே திரும்பி வந்துவிடும்படி சொன்னேன். அவரும் வந்துவிடுவதாகத்தான் சொன்னார். அதற்குப் பிறகு அவரது போன் “ஸ்விட்ச் ஆ•ப்” ஆகிவிட்ட பிறகு அவரை எங்கு பிடித்து, எப்படிக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. என் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
8. மங்களேஸ்வரி, க/பெ. சண்முகம், காக்கனேந்தல், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் (துப்பாக்கிச் சூட்டில் பலியான வெள்ளைச்சாமியின் அண்ணி).
அவர் (வெள்ளைச்சாமி) குருபூசைக்கு செல்வதற்காக பரமக்குடியில் போகவில்லை. எங்கள் உறவினர் திருமணத்திற்காக மதுரைக்குப் போகத்தான், பரமக்குடி வந்தார். துப்பாக்கிச் சூடு நடந்த அன்று மாலை 4.30 மணி இருக்கும். பரமக்குடி வந்து எனக்கு போன் பண்ணினார். பரமக்குடி வந்திருப்பதாகவும், திருமணத்திற்கு வரும்படியும் என்னிடம் சொன்னார். நான், சமையல் வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை பரமக்குடியிலேயே இருக்கும்படி சொன்னேன். மீண்டும், வெள்ளைச்சாமி போன் பண்ணி, பரமக்குடியில் இரண்டு பேரை போலீஸ்
துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று சொன்னார். நான் பதில் சொல்லுவதற்குள் போன் “கட்” ஆகிவிட்டது. அதற்குப்பிறகு வெள்ளைச்சாமியிடமிருந்து போன் வரவில்லை. நானும் அவரது செல்லுக்கு போன் பண்ணினேன். “ஸ்விட்ச் ஆப்”-ஆகிவிட்டது. பிறகு என்ன நடந்ததோ என்பதை அறிந்து கொள்ள நான் பரமக்குடி ஐந்து முனை ரோட்டுப் பக்கம் போனேன்.
அப்போது மணி 7 இருக்கும். போலீஸ்காரர் ஒருவர், சிமென்ட் பைப் எடுத்து, ரோட்டில் நின்று கொண்டிருந்த காரை, அடித்து நொறுக்குவதைப் பார்த்தேன். இன்னும் சில போலீஸார், அந்த வழியாக வந்த பையனை ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்தனர். அந்த பையன் அவர்களிடம் சிக்கிக் கொண்டான்.
அப்போது துப்பாக்கிக் குண்டு மார்பில் பாய்ந்திருந்த ஒருவர், பதற்றமாக அந்தப்பக்கம் ஓடிவந்தார். நான் ரயில்வே கேட் தாண்டி நின்று கொண்டிருந்தேன். என்னிடம் வந்து அவர் மார்பில் சொறுகி கொண்டிருந்த குண்டை எடுத்துவிடும்படி சொன்னார். நான் உருவி எடுத்தேன். அது ரப்பர் குண்டு போலிருந்தது. பின்னர் அவர் ஓடிவிட்டார் நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போதும், ஐந்துமுனை ரோட்டுப் பகுதியில் போலீஸார் துப்பாக்கியை ஏந்தியபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ரயில்வே கேட் அருகே உள்ள மொட்டை மாடிகளில் ஏறி, போலீஸார் துப்பாக்கியால் சுடுவதை பார்த்தேன்.
இரவு 12 மணிக்கு, இளையாங்குடி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளைச்சாமி இருப்பதாக தகவல் வந்தது. பிறகு மதுரையில் இருப்பதாகச் சொன்னார்கள். பிறகுதான் சக்திவேல் போய் மதுரையில் பார்த்தான்.
9. சக்திவேல், த/பெ. வெள்ளைச்சாமி, காக்கனேந்தல், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் (துப்பாக்கிச் சூட்டில் பலியான வெள்ளைச்சாமியின் மகன்)
நாங்கள் 12-ஆம் தேதி காலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் எனது தகப்பனாரின் இறந்த உடலைப் பார்த்தேன். பின்னந்தலையில் பலத்த காயம். தலைக்குக் கீழே ரத்தம் திரண்டு கிடந்தது. இடது கை நசுக்கி, ஒடிக்கப்பட்டு கிடந்தது. உடம்பு முழுவதும் தடியால் அடிக்கப்பட்ட தடம் இருந்தது. உடம்பை நசுக்கினால் எப்படி இருக்குமோ அப்படி கிடந்தது. உடம்பில் துணியில்லாமல் எங்களுக்கு காட்டினார்கள். என் தந்தையை பல பேர் சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
10. வீ. பாண்டி, த/பெ. வீரபத்திரன், மருந்தூர், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
நான் மரக்கடையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சம்பவம் நடந்த அன்று, நான் குருபூசைக்கு பரமக்குடிக்குச் சென்றேன். எனது சொந்த ஊர் பரமக்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள மருந்தூர் 11.9.2011 காலை 11 மணிக்கு அய்ந்து முனை ரோட்டில் சிலர் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். ஜான் பாண்டியனை விடுதலை செய்யச் சொல்லி கோஷம் எழுப்பினர். அப்போது அந்த இடத்தில் சுமார் 100 பேர் இருந்தார்கள்.
அப்போது 1000 போலீஸ¤க்கு மேல் அங்கு இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் போலீஸ். 12 மணிக்கெல்லாம், போலீஸார் திடீரென தடியடி நடத்தினர். அதனால் எல்லோரும் கலைந்து ஓடினார்கள். நானும், என்னோடு சேர்ந்து கொஞ்சப் பேரும் ஒரு வீட்டிற்குள் ஓடி ஒளிந்துகொண்டோம். ரோட்டில் கல்வீசும் சத்தமும், துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. இரண்டு மணிவரை நாங்கள் யாரும் வீட்டைவீட்டு வெளியே வரவில்லை.
அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக மெல்ல வீட்டைவிட்டு வெளியேறினர். எனக்கு பயமாக இருந்ததால் நான் வெளியேற வில்லை. கடைசியில் எல்லோரும் போய்விட்டனர். நான் ஒருவன் மட்டுமே உள்ளே இருந்ததால், மாலை 4.30 மணிக்கு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்து வீட்டைவிட்டு வெளியே வந்தேன். வந்தவுடன் போலீசார் என்னைப் பார்த்து விட்டனர். விரட்டிவந்து, என்னைச் சுற்றி நின்று கொண்டு 15 போலீசார் என் மீது தடியடி நடத்தினர். தலையில் அடித்ததால் ரத்தம் ஒழுகி மயக்க நிலையில் விழுந்தேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை. சாதிப்பெயரைச் சொல்லி திட்டிக் கொண்டே அடித்து நொறுக்கினர். துப்பாக்கியின் கைப்பிடி கட்டையக் கொண்டு அடித்து, இடது கால் எலும்பை அடித்து நொறுக்கினார்கள்.
நான் மயக்கமாகி கீழே விழுந்தபிறகு சிலர் அடித்துக் கொண்டே இருக்க, இரு போலீஸார் எனது கைகளைப் பிடித்துத் தரையில் கிடந்த என்னை தரதரவென இழுத்துச் சென்றனர். அதனால் உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டது. வலது கை விரல்களின் எலும்புகல் நொறுக்கிவிட்டனர். இழுத்துக் கொண்டு வந்து ஐந்து முனை சாலையில் குவித்தனர். ஏற்கனவே எனக்கு முன்னால் பலர், அங்கே கிடந்தனர். 5.00 மணி இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினர். ஏற முடியாதவர்களை அடித்தனர். சிலரை தூக்கி வீசினர். பின்னர் 5.30 மணிக்கு பரமக்குடி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. எலும்புகள் நொறுங்கிவிட்டன என்று மருத்துவர் சொன்னார். போலீஸ் வாகனம் எதையும் நான் தீ வைக்கவில்லை. கற்கள் வீசவில்லை. கலவரம் என தெரிந்ததும், வீட்டிற்குள்ளேயே பதுங்கிக்கிடந்த என்னை அடித்து நொறுக்கியது ஏன்?
11. தனிக்கொடி, த/பெ. முத்துக்கருப்பன், S. காவனூர், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
நான் போர்வெல் மெஷின் உ¡¢மையாளர். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த அன்று தியாகி இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடந்தது. நான் பரமக்குடி வசந்தபுரத்தில் ஆழ்துளை கிணறுக்கு பைப் பதிக்க வேண்டியிருந்ததால், அங்கு போயிருந்தேன். வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது ஐந்து முனை சாலையில் போலீசார் தடியடி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மணி 12 இருக்கும். என்னைப் பார்த்ததும் 15 போலீசார் சுற்றி நின்று கொண்டு சரமாரியாக அடித்தனர்.
முதல் அடியே தலையில்தான் விழுந்தது. மண்டை உடைந்து, ஏராளமான ரத்தம் வெளியேறியது. ஆனாலும் தலையிலேயே அடித்தார்கள். நான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை சிவப்புச் சட்டை போல் ஆகியது. இரத்தம் ஏராளமாக வெளியேறியதால், நான் அரை மயக்கத்தில் கீழே விழுந்து கிடந்த என்னை இடது காலைப் பிடித்து தரையில் தேய்த்தபடி தரதரவென இழுத்துச் சென்று ஐந்து முனைச் சந்திப்பில் ஏற்கனவே 10, 20வது பேர் அடிப்பட்டு குற்றுயிராகக் கிடந்தனர்.
ஒருவர்மேல் ஒருவரை தூக்கி வீசியிருந்தார்கள். என்னையும் அந்த மானிடக் குவியல் மீது போலீசார் தூக்கி வீசினார்கள். மதியம் 2 மணிக்குப் பரமக்குடி காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தார்கள் அங்கேயே இரவு 10.30 மணிவரை வைத்திருந்தார்கள். பலத்த காயங்களுடன் நாங்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்திலேயே கிடந்தோம். இரவு 10.30 மணிக்கு வேனில் ஏற்றினார்கள். ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கே புதன் வரை இருந்தேன். வியாழக்கிழமை (15.9.2011) தான் மதுரைக்குக் கொண்டுவந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார்கள். தலையில் இரண்டு இடங்களில் தடியடிபட்டு மண்டை உடைந்து, தையல் போட்டுள்ளனர். வலது கையில் எலும்பு உடைந்துள்ளது. தடியடியினாலும், துப்பாக்கி கட்டையினாலும் உடம்பெல்லாம் அடித்தார்கள். அதனால், உடம்பு முழுவதிலும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
12. சிவா, த/பெ. ரவிச்சந்திரன், உடைச்சியார் வலசை, பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
நான் தியாகி இம்மானுவேல் சேகரனின் குருபூசை நாளன்று, வேடிக்கை பார்ப்பதற்காக பரமக்குடி போயிருந்தேன். இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அதிக கூட்டம் இல்லாததால், ஐந்து சந்திப்பில் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கு போனேன். நூறு பேருக்கும் குறைவாகதான் அங்கு இருந்தார்கள். குருபூசைக்கு வந்து வாகனங்கள் அந்த வழியாகப் போய் வந்து கொண்டிருந்தன. ஜான் பாண்டியனை விடுதலைச் செய்யச் சொல்லி. சாலையில் நின்று கொண்டு சிலர் கோஷம் போட்டார்கள். நான் ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.
12 மணிவாக்கில், போலீஸ்காரர்கள் திடீரென “லத்தி சார்ஜ்” செய்தார்கள். எல்லோரும் சிதறி ஓடினார்கள். “லத்தி சார்ஜ்” நடப்பதற்கு முன்பு யாரும் கல்லெறியவோ, போலீசைத் தாக்கவோ இல்லை. “லத்தி சார்ஜ்” நடந்தவுடன் எல்லோரும் சிதறி ஓடினார்கள். நானும் ஓடினேன். நாங்கள் சிதறி ஓடும்போதே போலீஸ் துப்பாக்கியால் சுட்டது. எனது வலது காலின் பின் பகுதியில், முட்டுக்கு மேலே, துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னரும் தப்பித்து ஓடினேன்.
போலீஸ் பொன்னையாபுரம் வரை விரட்டி வந்தனர். தொலைவில் நின்று பார்த்தபோது. வஜ்ரா வண்டியும், தீயணைப்பு வண்டியும் ஐந்து முனை ரோட்டில் வந்து நின்றது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அது தீப்பிடித்து எ¡¢ய ஆரம்பித்தது. வண்டி தீப்பிடிக்கும் போது, ரோட்டில் போலீஸ்காரர்கள் மட்டுமே நின்று கொண்டு, துப்பாக்கியால் நாலாபுறமும் சுட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சுடப்பட்டதை சிலா¢டம் சொன்னேன். அவர்கள் தான் என்னை பரமக்குடி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இப்போது மதுரைக்குக் கொண்டு வந்துள்ளனர். எனது காலில் உள்ள துப்பாக்கிக் குண்டை இன்னும் வெளியே எடுக்கவில்லை. எடுத்தால் நரம்பு அறுந்துவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். போலீஸ் என் மீது வழக்கு போட்டுள்ளதாக சொல்லுகிறார்கள். குண்டடிபட்டதில் வலது கால் எலும்பு சிதறியது. சதையும் பிய்த்துக்கொண்டு வெளியே விழுந்தன. காலில் கட்டுப் போட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தலையில் யாரெல்லாம் சிவப்பு பச்சை துண்டு கட்டியிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் குறிவைத்து சுட்டது போலீஸ்.
13. ராஜ்குமார், த/பெ. தவமணி, மணி நகர், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
நான் சென்னையில் L & T கம்பெனியில், சிமெண்ட்-மணல் லேப்-ல் வேலை பார்த்து வருகிறேன். 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். போன ஞாயிற்றுக்கிழமையன்று (11.09.2011) காலை சென்னையிலிருந்து பரமக்குடி வந்து சேர்ந்தேன். நான் வரும்போது மதியம் 12.30 மணியிருக்கும். மக்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். போலீஸ் அவர்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடந்தது என்றே எனக்குத் தொ¢யவில்லை. ஐந்து முக்கு ரோட்டிலிருந்து பலர் நான் நின்று கொண்டிருந்த பக்கம் ஓடி வந்தார்கள்.
அவர்களை விரட்டிவந்த போலீசார் என்னைப் பார்த்ததும், என் பக்கம் திரும்பி ஓடி வந்தனர். நான் பயந்து ஓடவில்லை. சரமா¡¢யாக அடித்தனர். ஒரு போலீஸ் துப்பாக்கியின் பின்புறக் கட்டையை கொண்டு எனது பின்னந்தலையில் அடித்தார். ரத்தம் கொட்டி, சட்டையெல்லாம் நனைந்தது. என் கையிலிருந்த பையைப் பிடுங்கிக் கொண்டார்கள். அதில் ரூ. 5,000/- பணமும் புது ஆடைகளும் இருந்தன. குருபூசையா என்று சொல்லி, சாதிப்பெயரைச் சொல்லி அடித்தனர். உடம்பெல்லாம் தடியால் அடித்ததில் ரத்தக்காயம் ஏற்பட்டது. வலது கனுக்காலில் மேல் பகுதியில் துப்பாக்கிக் கட்டையைக் கொண்டு அடித்ததில் எலும்பு முறிந்தது. “அடிக்க வேண்டாம்” என்று சொல்லித் தடுத்ததில் வலது ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதி உடைந்து தொங்கியது. காலில் எலும்பு உடைந்ததால் என்னால் நடக்க முடியவில்லை. தரையில் தேய்த்துக் கொண்டே இழுத்து வந்தனர். வரும்போதே அடி. பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்தனர்.
அப்படியே இழுத்துக் கொண்டுவந்து, ஐந்து முக்கு ரோட்டில் போட்டனர். தரையில் உரசியதால், உடம்பெல்லாம் ரத்த காயம். பின்னர் 5.30 மணி இருக்கும், பரமக்குடி அரசுப் பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து, இளையாங்குடி அரசு மருத்துமனைக்கும், நேற்று (16.09.2011) தான் மதுரைக்குக் கொண்டுவந்தனர். இப்போது எலும்புகள் முறிந்த விரலிலும், காலிலும் கட்டுப்போட்டுள்ளனர். இதுவரை அரசு அதிகா¡¢கள் யாரும் வந்து விசா¡¢க்கவில்லை. அடிப்பட்டு சுமார் 5 மணி நேரம் பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டில் கிடந்தபோது தண்ணீர் கேட்டு அழுதேன். போலீசார் தண்ணீர்கூட கொடுக்கவில்லை.
14. செந்தில்குமார், த/பெ. நாகு, வெங்காளூர்
சம்பவம் நடந்த அன்று, பரமக்குடிக்கு வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். ஐந்து முக்கு ரோட்டில் நூறுக்கும் குறைவானவர்கள் சாலையில் நின்று கொண்டும், சிலர் அங்குமிங்கும் உட்கார்ந்து கொண்டும் ஜான் பாண்டியனை விடுதலை செய்யச் சொல்லி கோஷம் எழுப்பினர். சிலர் விசிலடித்தனர். அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்களைவிட போலீஸ் அதிகமாக இருந்தது. செந்தில்வேலன் S.P. எல்லாவற்றையும் படம் எடுக்கச் சொல்லி ஒருவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
S.P. அதை எடு இதை எடு என்று சொல்லிக் கொண்டிருந்தார். 12 மணி இருக்கும் திடீரென “லத்தி சார்ஜ்” செய்தனர் போலீசார். எல்லோரும் சிதறி ஓடினர். என்னை விரட்டி வந்து பிடித்து, கால், கைகளில் சுற்றிலும் நின்றுகொண்டு போலீஸ்காரர்கள் அடித்தார்கள். இடது கையில் பலமான அடி விழுந்ததும் எலும்பு நொறுங்கியது. தலையின் பின்புறத்தில் துப்பாக்கிக் கைப்பிடி கட்டையால் இடித்துத் தள்ளினர். அப்போதே போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சிதறி ஓடியவர்கள் கற்களைக் கொண்டு எறிந்தனர். பதிலுக்கு போலீசும் கற்களைக் கொண்டு எறிந்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் உடலை, போலீஸ் ஜீப்பில் ஏற்றியதைப் பார்த்தேன். அந்த ஜீப்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட இன்னொருவர் உடலும் இருந்தது. எத்தனை பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று எனக்குத் தொ¢யவில்லை. நான் அரை மயக்கத்தில் கிடந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்தும்போது, பல போலீஸ்காரர்கள் கைலி, துண்டு சட்டை போட்டிருந்ததையும், அவர்கள் துப்பாக்கியால் சுடுவதையும் பார்த்தேன்.
இரவு 7 மணிக்குத்தான் என்னை இளையாங்குடி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். எலும்புகள் பல இடங்களில் நொறுங்கியுள்ளதால், இளையாங்குடியிலிருந்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர். (சட்டையைக் கழற்றிக் காட்டினார், பின்பு முதுகு முழுவதையும் கோடு கோடாய் காயங்கள் இருந்தன. தோல் எழும்பி, இரத்தம் கட்டிப் போய் கிடந்தன).
சிங்கத்துரை, த/பெ. முத்து, பர்மா காலனி,
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று, பரமக்குடி ஐந்து முக்கு சந்திப்பில், சுமார் மாலை 4 மணி இருக்கும், 30 போலீசாரிடம் நான் சிக்கிக் கொண்டேன். சரியான அடி அடித்தார்கள். சாதிபெயரைச் சொல்லி திட்டி அடித்தனர். காலையிலிருந்தே பதற்றமாகத்தான் இருந்தது. போலீஸ் வேண்டுமென்றே கெடுபிடி செய்தனர்.
அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். பின்பு சிவகங்கை கொண்டு சென்று கடைசியில்தான் மதுரை கொண்டு வந்தனர். கண்ணில் இன்னும் ரத்தக்கசிவு நிற்கவில்லை.
16. தர்மராஜ், த/பெ. முத்து, அனுமனோ¢, பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூசைக்கு காலையிலேயே பரமக்குடி போய் நினைவிடத்தில் அஞ்சலி செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். பரமக்குடியில் கலவரம் என்று எனக்குத் தொ¢யாது மஞ்சூரைச் சேர்ந்த ஒரு பையனுக்கு உடம்பு சா¢யில்லையென சொல்லி, மெயின் ரோட்டுக்குச் கூட்டி வந்தார்கள்.
அப்போது அந்த பக்கம் நான் வந்து கொண்டிருந்தேன். என் TVS வண்டியில் நான் என்னிடம், பரமக்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டனர். நான் வண்டியில் அந்த பையனை ஏற்றிக் கொண்டு பரமக்குடி வந்ததும், 10, 20பது போலீஸார் என் வண்டியை மறித்து சரமா¡¢யாக அடித்தனர்.
அப்போது மணி ஐந்து இருக்கும். வலது கால் முட்டியில் துப்பாக்கிக் கட்டையின் பின்புறத்தைக் கொண்டு ஓங்கி அடித்து முட்டியை நொறுக்கிவிட்டனர். ஏற்கனவே எனக்குத் தைராய்டு இருந்தது. அந்தப் பகுதியிலேயே தடியால் அடித்தனர். என்னை அடித்து நொறுக்கினார்கள். நான் அழைத்து வந்த பையனை ஒரு போலீஸ் தூக்கி அந்தப்பக்கம் கொண்டு போய்விட்டார். என்னை கீழே தள்ளியதால் நான் குப்புறப்படுத்துக் கொண்டேன்.
மாட்டை அடிப்பது போல், முதுகில் அடித்தனர். முதுகு முழுவதும் காயம். எனது வண்டி (எண்.TN 65 P 9311)யைக் காணவில்லை. போலீசிடம் தான் அந்த வண்டியிருக்கும். அடிதாங்க முடியாமல் கிடந்த என்னை தரையோடு தரையாக இழுத்துவந்து ஐந்து முக்கு சந்திப்பில் ஏற்கனவே அடிப்பட்டுக் கிடந்தவர்களோடு தூக்கிப்போட்டனர். அங்கே ஏற்கனவே 15 பேர்களுக்கும் மேலாகக் குவிந்து கிடந்தனர்.
இரவு 7.30 மணி இருக்கும், ஒரு வேனில் ஏற்றி 11 மணிக்கு மதுரை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கியின் கைப்பிடியால் அடித்ததில் எனது வலது கால்மூட்டில் எலும்பு நொறுங்கிவிட்டது. அடித்துச் சித்ரவதை செய்தனர்.
17. M. மாணிக்கம், த/பெ. மெய்யன், ராஜீ நகர்
நான் தினமும் காலையிலேயே பரமக்குடி டவுனுக்குச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்து அன்று, ஐந்து முக்கு ரோட்டில் கும்பல் கூடியிருந்தது. நிறைய போலீசாரும் இருந்தனர். கொஞ்சம் ரோட்டின் நடுவே நின்றுகொண்டு, கத்திக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்தது ஜே.பி.யை விடுதலை செய்யச் சொல்லி தோஷம் போட்டனர். நான் ஓரத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, போலீஸ் தடியில் அடித்து விரட்டினர்.
கூட்டமாக இருந்தவர்கள் சிதறி ஓடினர் நானும் ஓடினேன். அடுத்த நொடி, எனக்குப் போலீசார் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது மணி 12.30 இருக்கும் இன்னும் கொஞ்ச தூரம் ஓடி, நின்றேன். எனக்கும் போலீசார் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் கொஞ்ச தொலைவுதான் இருந்தது ஓரமாகத்தான் நின்று கொண்டிருந்தேன். திடீரென நான் இருந்த பக்கம் திரும்பி ஒரு போலீஸ் சுட ஆரம்பித்தார். குண்டு பாய்ந்துவந்து என் நெற்றியில் பாய்ந்தது. உள்ளே போகவில்லை. நெற்றியிலேயே நின்றுவிட்டது.
அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன். பக்கத்திலிருந்தவர்கள், தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்ந்தவர்கள். பரமக்குடி மருத்துவமனையிலிருந்து உடனே மதுரைக்குக் கொண்டுவந்தனர். அன்று இரவே குண்டை வெளியே எடுத்தனர். போலீசார் திட்டம் போட்டுத்தான் செய்துள்ளனர். இனிமேல் இம்மானுவேல் சேகரன் குருபூசையை நடத்திவிடக்கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம்.
சம்பவத்தின் போது இருந்த நபர்
செல்வக்குமார், த/பெ. இராமன், எண்.807A, 24வது தெரு, பக்தவச்சலம் நகர், சென்னை-600 039.
நான் தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகள் இயக்கி வருகிறேன். நான் பரமக்குடியில் நடைபெறும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை பற்றி ஒரு குறும்படம் எடுப்பதற்காக கடந்த 11.09.2011 அன்று எனது படக்குழுவினருடன் பரமக்குடிக்கு சென்று இருந்தேன். காலை 8 மணியளவில் இம்மானுவேல் நினைவிடத்தில் படப்பிடிப்பை தொடங்கிய நான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து எனது ஒளிப்பதிவாளர் அருள் என்பவர் படம் பிடித்து கொண்டிருந்தார்.
சுமார் 12 மணியளவில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாலும், மூன்று மணிக்கு பிறகு தான் கூட்டம் வரும் என்று அப்பகுதி மக்கள் கூறியதாலும், நாங்கள் மதிய உணவுக்காக பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது சுமார் 100 நபர்கள் அங்கு ரோட்டை மறித்து அங்கு நின்று கொண்டிருந்த 200 பேர் கொண்ட காவல்துறையினருடன் பேசி கொண்டிருந்தனர்.
நாங்கள் உடனே அந்நிகழ்வுகளையும் படம் பிடிக்க தொடங்கினோம். சுமார் ஐந்து நிமிடம் கூட நாங்கள் படம் பிடித்திருக்க மாட்டோம் அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மீது காவல்துறையினர் எந்தவித முன்னறிவிப்பின்றி தடியடி நடத்த தொடங்கினர்.
என்ன பிரச்சினை என்றே தெரியாமல் படம் பிடித்து கொண்டிருந்த எங்களையும் காவல்துறையினர் தாக்கினர். காவல்துறையினரின் இந்த தீடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். எங்களை தாக்கிய காவல்துறையினரிடம் நாங்கள் பத்திரிகையாளர் என்று கூறிய பிறகும் எங்கள் மீதான தாக்குதலை அவர்கள் நிறுத்தவில்லை.
இந்த தாக்குதலில் எனது ஒளிப்பதிவாளருக்கு தலையிலும் உடம்பின் பல பாகங்களிலும் பலத்த அடிவிழுந்தது, தலையில் இரத்தம் வழிந்தது. மருத்துவமனைக்கு செல்ல சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 அடி தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, சம்பவம் குறித்து சென்னையில் உள்ள எனது சக பத்தி¡¢கையாளர்களுக்கும் நான் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு பத்தி¡¢கையாளர் சங்க தலைவருக்கு எனது செல்பேசி மூலம் நாங்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்து சொல்லிக் கொண்டிருந்தபோதே எந்தவித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டு கொண்டிருந்தது. அந்த சத்தத்தை கேட்டவுடன் நாங்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வேகமாக மருத்துமனைக்கு சென்று விட்டோம்.
மேற்படி சம்பவம் அனைத்துமே பத்து நிமிட நேரத்துக்குள்ளாகவே நடந்தேறியது. அதன் பிறகு பரமக்குடியில் ஐந்து முக்கு ரோட்டில் பெரும் கலவரம் நடப்பதாகவும், காவல்துறையினர் பார்ப்பவர்களையும் எல்லாம் சுடுவதாகவும், தகவல் பரவியதாலும் அப்பகுதியில் பெரும் பதட்டம் உருவானதாலும், நாங்கள் அப்பகுதி மக்கள் துணையுடன் பரமக்குடியை விட்டு பாதுகாப்பாக வெளியேறி வந்துவிட்டோம்.
பரமக்குடியில் சம்பவ இடத்தில் இருந்த நேரம் வரை பொது மக்களை தவிர காவல்துறையினர் மட்டுமே பெருமளவில் இருந்தனர். வருவாய்துறையினர் யாரும் அப்பகுதியில் இல்லை.
1. தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. ராஜேஷ் தாஸ், I.P.S., அவர்களை உண்மை அறியும் குழுவினர் 18.09.2011 அன்று சந்திக்க அனுமதி கேட்டனர். அதற்கு அவர் தான் தற்போது முகாம் அலுவலகத்தில் (வீடு) உள்ளதாகவும் அலுவலகத்திற்கு வந்தால் சந்திக்கலாம் என்று அவரது உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்தார். அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்று கேட்டதற்கு, அந்த உதவியாளர் அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அவர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்று கூறினார். இதன் மூலம் அவர் உண்மை அறியும் குழுவினரை சந்திக்க தவிர்த்துவிட்டார்.
2. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம், I.A.S., உண்மை அறியும் குழுவினர் சந்தித்தபோது பொது மக்கள் மாவட்ட ஆட்சியர்தான் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்திரவிட்டிருப்பார் என்று தவறாக கருதுகிறார்கள். ஆனால், நிர்வாகத் துறை நடுவரான வட்டாட்சியரோ, வருவாய் கோட்டாட்சியரோ உத்திரவிட சட்டத்தில் அதிகாரமுள்ளது என்று கூறியதுடன், இச்சம்பவம் குறித்து தனக்கு ஒரு மணி நேரம் கழித்து தான் தெரிந்தது இது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளதாகவும் 30 நாட்களில் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
3. பரமக்குடி கோட்டாட்சியர் திருமதி. மீரா பரமேஸ்வா¢, “காலையில் 8 மணிக்கு நான் ஒரு ரவுண்ட்ஸ் போய்வந்தேன். கல்லறை அருகே சென்றுவந்தேன். நான் மீண்டும் ரவுண்ட்ஸ் போய்க்கொண்டிருந்தபோது சாலை மறியல் நடப்பதாக தாசில்தார் திரு.சிவக்குமார் 11 மணிக்கு தகவல் தந்தார். நான் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தேன். அங்கே துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டிருந்தது. மேற்கொண்டு நடந்த சம்பவங்களை நான் கூறமுடியாது.
மாவட்ட ஆட்சியா¢ன் அனுமதி பெற்றுதான் கூறமுடியும். நாங்கள் அரசுப் பணியாளர் என்பதால் எங்களுக்கு வரைமுறைகள் உள்ளன. எங்களது மேலதிகா¡¢களை சந்தித்துதான் நீங்கள் விவரத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்று உண்மை அறியும் குழுவினா¢டம் தெவித்தார்.
4. பரமக்குடி வட்டாட்சியர் திரு. சிவக்குமார், “எனது வாழ்நாளில் இது ஒரு கறுப்பு நாள். என்னால் என்றைக்கும் இதை மறக்க முடியாது. எனது பணியில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை” என்று உண்மை அறியும் குழுவினரிடம் கூறினார்.
5. சம்பவ நாளான 11.09.2011 அன்று சம்பவ இடத்தில் பணியிலிருந்த திரு.செந்தில்வேலன், I.P.S., துணை ஆணையர், (தற்போது) போக்குவரத்து காவல், சென்னை (தெற்கு) அவர்களை தொடர்பு கொண்டு உண்மை அறியும் குழுவினர் நோ¢ல் சந்திக்க அனுமதி கேட்டபோது தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பின்னர் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் கண்டுப்பிடிப்புகள்:
1. இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை தலித் மக்கள் சிறப்பாக அனுசா¢ப்பதை சீர்குலைக்கும் பொருட்டே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 09.09.2011 அன்று பழனிக்குமாரின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. பழனிக்குமாரை வெட்டும்போது கொலையாளிகள் கூறியதாக உள்ள “டே பச்சேரி காரங்களா நில்லுங்குடா” என்று கூறி வழிமறித்து “நீங்க குருபூஜைக்கு எப்படி போறீங்க என்று பார்ப்போம்“ என்று கூறியுள்ளது மாற்று சாதியினா¢ன் இந்த எண்ணத்தை வெளியிப்படுத்துவதாக உள்ளது.
2. துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டபோது காவல்துறையினரை தலைமை ஏற்று வழிநடத்தியவர் திரு செந்தில்வேலன், I.P.S. இவர் சென்னை அடையாறு துணை ஆணையர். இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக ஏற்கனவே இருந்திருக்கிறார். இவர் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடிக்கு பணியில் அனுப்பப்பட்டுள்ளது துப்பாக்கிச்சூடு திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை பலமாகவும் பரவலாகவும் தோற்றுவித்துள்ளது.
3. சம்பவ நாளன்று தலித் மக்களும், இயக்கத் தலைவர்களும் மாலை 3 மணிக்கு மேல் நினைவிடத்தில் மிகப்பெருமளவில் கூடுவார்கள், நினைவு நாள் சிறப்பான வகையில் முடிவுறும் என்பதைத் தடுத்து, நிகழ்ச்சியை சீர்குலைக்கவும் இனிவரும் ஆண்டுகளில் இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட ஒரு பய உணர்வை (fear psychosis) தலித் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனே இத்துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு பலதரப்பினா¢டம் விசா¡¢த்த வகையில் உறுதிப்படுத்தியுள்ளது.
4. சம்பவ இடத்தில், சம்பவ நேரத்தில் சாலைகளில் பொது போக்குவரத்து என்பதே இல்லை. காரணம், பரமக்குடி நகரத்திலேயே இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்திருப்பதால் வெவ்வேறு ஊர்களில், திசைகளிலிருந்து வரும் அனைத்து போக்குவரத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுவிட்டன. பரமக்குடிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாகனங்கள் மட்டுமே காவல்துறையினரால் அனுமதிக்கபட்டன. இந்நிலையில், திரு. ஜான் பாண்டியனின் கைது செய்தியைக் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று காவல்துறை தரப்பில் கூறியிருப்பது உண்மையல்ல.
5. அதேபோல், மக்கள் கலவரம் செய்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று காவல்துறைக் கூற்றும் உண்மையல்ல. தியாகி இம்மானுவேல் பேரவையினர் அளித்த விசாரணைக் குழுவிற்கு ஒரு காணொளி குறுந்தட்டில் (DVD) பதிவாகியுள்ளபடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்வரை எவ்வித வன்முறையும் நிகழவில்லை. அமைதியாக சென்று கொண்டிருந்த மக்களை திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி காவல்துறையினர் தடியடி செய்துள்ளனர். தடியடி துவங்கிய அடுத்த நிமிடமே சாலைகள் வெறிச் சோடியிருக்க தூரத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி குறிபார்த்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளனர். இதற்கும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.
6. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்படியான நடைமுறைகளான வாய்மொழி எச்சா¢க்கை, தடியடி முன்னறிவிப்பு, கண்ணீர்ப் புகை வீச்சு, தண்ணீர் பீச்சியடித்தல், ரப்பர் குண்டு தாக்குதல், வானத்தை நோக்கி சுடல் போன்றவை முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டு அங்கு திரளும் தலித் மக்களைக் கொல்லவேண்டுமென்ற நோக்கத்துடனே துப்பாக்கிச் சூடு ஆட்களை நோக்கி நடத்தப்பட்டுள்ளது. எனவேதான், நெற்றியிலும், மார்பிலும், தோள்பட்டையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. அதேபோல், தடியடியும் உயி¡¢ழக்கும் அளவிற்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. காவல்துறையால் தடியடி செய்து கைது செய்யப்பட்ட தீர்ப்புகனியும் உடலிலும் குண்டு பாய்ந்துள்ளது.
7. துப்பாக்கிச் சூடு நடத்தும் முன் வருவாய்த் துறையின் நிர்வாக நடுவரிடம் எழுத்துப் பூர்வமான ஆணை பெறவேண்டும் என்ற சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தும்போது வரை வருவாய்த் துறையினர், வட்டாட்சியர் உட்பட, எவரும் சம்பவ இடத்தில் இல்லை என்பதை மேற்சொன்ன குறுந்தகட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள காட்சிகள் மூலம் அறிய முடிகிறது. சம்பவ இடத்திலிருந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் உண்மை அறியும் குழுவிற்கு அளித்துள்ள எழுத்துபூர்வ வாக்குமூலத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
8. அப்பகுதி தலித் மக்களிடையே செல்வாக்கு மிகுந்த திரு. ஜான் பாண்டியனை நினைவேந்தல் நாளன்று மாலை 3 மணிக்கு நினைவிடத்திற்கு வர அனுமதித்திருந்த காவல்துறை, காலை 10.30 மணிக்கு அவரைக் கைது செய்ததும், அவரது கைதுபற்றி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்ததும் குழுமியிருந்த மக்களிடையே பதற்றத்தை தூண்டிவிட வேண்டும் என்பதால்தான் என்று தெரியவருகிறது. அப்படியும் திரு. ஜான் பாண்டியனை விடுவிக்க வேண்டும் என்று அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்கள்மீது தடியடி, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு கலவரம் செய்தார்கள் என்று 1000த்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
9. துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றில் கொல்லப்பட்டவர்களும், படுகாயமடைந்தோரும் திரு.ஜான் பாண்டியனின் இயக்கத்துடன் எவ்வித தொடர்புமற்றவர்கள் என்பது பாதிக்கப்பட்ட தரப்பினா¢ன் வாக்குமூலங்களிலிருந்து தெளிவாகிறது. இந்தப் பின்னணியில், கொல்லபட்டவர்களும், படுகாயமடைந்தோரும் திரு. ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கோரி கலவரம் செய்ததாக காவல்துறையினர் கூறுவது உண்மை அறியும் குழுவினரின் விசாரணையில் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் ஏற்கத்தக்கதல்ல.
10. மதுரை சிந்தாமணி அருகே அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு.கஜேந்திரன் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டிலும் இதே உள்நோக்கத்தையும் திட்டத்தையும் காணமுடிகிறது. துப்பாக்கிச் சூடு 12.30 மணியளவில் நடத்துவதற்கு முன்னர் முன்னேற்பாடாக காலை 11 மணிக்கே எப்போதுமில்லாத வழக்கமாக அப்பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி, அடைக்கச் செய்ததும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது. இங்கும்கூட துப்பாக்கிச் சூட்டிற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்படியான நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. பின்னிட்டு, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது.
11. மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டோ¡¢டம் உண்மை அறியும் குழுவினர் சந்தித்து விசா¡¢த்தபோது, கும்பலைக் கலைப்பதற்கு நிகழ்த்திய தடியடி, துப்பாக்கிச் சூடாக இல்லாமல் கொலை வெறியுடன் உயிர் போகும் வகையில் குற்றுயிரும் கொலையுயிருமாகும் வகையில் தாக்குதல் நடந்ததை அவர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர். சம்பவ சாட்சிகளான இவர்களனைவரும்கூட தடியடி, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றிற்கு எவ்வித வாய்மொழி எச்சரிக்கை முன்னறிவிப்பும் காவல்துறையினர் செய்யவில்லை என்பதை உறுதிபடத் தொ¢வித்துள்ளனர் என்பதிலிருந்து இச்சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டதாகவே உண்மை அறியும் குழு கருதுகிறது.
12. தென்மண்டல காவல்துறை தலைவர் திரு ராஜேஷ் தாஸ், IPS சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் திரு. செந்தில்வேலன் IPS ஆகியோர் உண்மை அறியும் குழுவினரை சந்திக்கத் தவிர்த்ததற்கும் உண்மை அறியும் குழுவினர் சந்தித்த பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. மீரா பரமேஸ்வரி பரமக்குடி வட்டாட்சியர் திரு. வி. சிவக்குமார் ஆகியோர் சம்பவம் தொடர்பாக பேச மறுத்ததும் உண்மைகளை மறைக்க வேண்டும் என்ற நோக்குடன் தான் என்பது தெளிவாகிறது.

கோரிக்கைகள் :


1. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
2. அதேபோல் மரணத்தாக்குதல் காரணமாக காயமடைந்த நபர்கள் ஒவ்வொருக்கும் குறைந்தபட்சம் ரூ5 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
3. இச்சம்பவங்களில் இறந்துபோன நபர்களில், காயம்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்படவேண்டும்.
4. தமிழக அரசால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணைக்குழுவான நீதிபதி திரு. கே.சம்பத் திரும்பப்பெறப்பட்டு அதற்கு மாற்றாக ஒன்றுக்கு மேற்பட்ட தற்போது பணியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
5. இறந்துபோன நபர்களின் சார்பாக தாக்கல் செய்யப்படும் புகார்கள் மீது சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கும், கொடும் தாக்குதல்குள்ளானோர் தாக்கல் செய்யும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் சட்டப் பி¡¢வுகளும் அவ்வழக்குகளில் சேர்க்கப்பட வேண்டும்.
6. இவை தவிர, துப்பாக்கிச் சூட்டையும், மரணத் தாக்குதல் தடியடியையும் நிகழ்த்திய அனைத்து காவல்தூறை அதிகாரிகளையும் பணி இடை நீக்கம் செய்து, தக்க துறைசார் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக