ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு! சிபிஐ விசாரணை வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


04-10-2011,10:19:35 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலச்செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன்,எம்.பி., உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இமானுவேல் சேகரன் நினைவு தினமான 2011 செப்டம்பர் 11ல் பரமக்குடி, இளையான்குடி, மதுரை மாநகர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேர் மரணமடைந்துள்ளதோடு, பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவங்களுக்கு 2 நாள் முன்னதாக மண்டல மாணிக்கம் பச்சேரி என்ற கிராமத்தில் பழனிகுமார் என்ற 16 வயது தலித் மாணவன் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டான். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து காவல்துறையினர் சுமார் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து பல அப்பாவிகளைத் கைது செய்துள்ளதாகவும், ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேசி பல கெடுபிடிகள் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி மட்டும் விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணைக் கமிசனை நியமனம் செய்தது. இந்த விசாரணைக் கமிசனை பாதிக்கப்பட்டவர்கள் உட்பட தலித் மக்கள் ஏற்றுக்கெள்ளாமல் தங்கள் ஆட்சேபணையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்பின்னணியில், செப்டம்பர், 11 துப்பாக்கிச்சூடு மற்றும் அதையொட்டி முன்னும் பின்னும் நடைபெற்றுள்ள காவல்துறை அத்துமீறல்கள் உட்பட அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் புலனாய்வு செய்திட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.


வாச்சாத்தியிலுள்ள பழங்குடி மக்கள் மீது அரசு அதிகாரிகள் நடத்திய வன்முறை தாக்குதல்கள் குறித்து 19 ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 269 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருமே குற்றவாளிகள் என தீர்மானித்து, இறந்து போன 54 பேர் தவிர 215 பேருக்கும் தண்டனை விதித்திருப்பது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுதான் முதன்முறை. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பினை மாநில செயற்குழு வரவேற்கிறது.

இத்தீர்ப்பின் ஒரு பகுதியாக வன்புணர்ச்சி கொடுமைக்குள்ளான 18 பெண்களுக்கு மட்டும் தலா ரூ.15 ஆயிரம் என அறிவித்திருப்பது மிகமிக குறைவான தொகையாகும். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, தமிழக அரசு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்ட அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தை உடனடியாக வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அரசை மார்க்சிளிட் கம்யூனிளிட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக