ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 22 அக்டோபர், 2011

நமக்கு சுதந்திரம் இல்லாவிட்டாலும், நம் உரிமைகளுக்காக....மாவீரன் இம்மானுவேல் சேகரன்

தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் செப்டம்பர் 11, 2011 அன்று பிற்பகல் முதல் அலறத் தொடங்கின. காவல் துறையினரோடு தேவேந்திரர் மக்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் கவனமாக "எடிட்' செய்யப்பட்டு, ஒளிபரப்பப்பட்டன. கையில் கற்களோடும் கட்டைகளோடும் வீதிகளில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்க, அனைத்துவித பாதுகாப்புக் கவசங்களுடனும் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டு, நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது காவல் துறை துப்பாக்கியால் சுடுகிறது. கற்களும் கட்டைகளும், கண்ணீர்புகை வாகனங்களையும், எந்திர துப்பாக்கிகளையும், இரும்புக் கவசங்களையும் எதிர்கொண்டு விடும் ஆயுதங்களா என்ன? காவல் துறையின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முன்னே, அம்மக்கள் நிராயுதபாணிகளே.
முதுகுளத்தூர் வட்டார "ஆப்ப நாடு மறவர் சங்க'த்தின் பெயரில் சுற்றறிக்கை ஒன்று, இப்பகுதி வாழ் மறவர் கிராமங்களுக்கு சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டதாகவும் அதில், "நம் தெய்வீகத் திருமகனுக்கு நிகராக, இம்மானுவேலின் நினைவு நாள் வளர்ந்து வருகிறது. அரசு விழாவாக அது அறிவிக்கப்படும் முன்னர், அதை அச்சமூட்டும் நிகழ்வாக மாற்றிவிட வேண்டும்.'' என கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. இச்செய்தி உறுதி செய்யப்பட்டதாகவே இருப்பினும், கடந்த நான்கு வருடங்களாக இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை சீர்குலைக்க, சாதி இந்து குறவர்கள் இப்பகுதியில் திட்டமிட்டு வருகின்றனர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும்.
2008, அக்டோபர் 29 அன்று, முதுகுளத்தூர் அருகிலுள்ள வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் வின்சென்ட் (வயது 34) படுகொலை. 2009, செப்டம்பர் 9 அன்று, அதே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் அறிவழகன் – வயது 30 (வின்சென்ட்டின் மைத்துனர்) படுகொலை. 2010, ஆகஸ்ட் 29 அன்று, திருப்புவனம் அருகிலுள்ள கொந்தகை எனும் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 19) படுகொலை என சமூகப் பதற்றத்தை உருவாக்க, சாதிவெறி குறவர்கள் தொடர்ந்து இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி படுகொலைகளைச் செய்து வந்தனர். ஆனால், கலவரச் சூழலை உருவாக்கும் அவர்களது கனவு ஈடேறவில்லை.
அண்மையில், இங்கிலாந்து நாட்டில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காவல் துறையால் கொல்லப்பட்டதைக் கண்டித்து மிகப்பெரிய கலவரம் மூண்டு, அக்கலவரம் பல நாட்கள் நீடித்தது. பல கோடி ரூபாய் சொத்துகள் நாசமாக்கப்பட்டன. அந்நாட்டின் முக்கிய
மாநகரங்களில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இருப்பினும், கலவரக்காரர்களுக்கு எதிராக காவல் துறையினர் ஓரிடத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்தாமல் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். அந்நாட்டிற்கு தன் குடிமக்களை மதிக்கத் தெரிந்திருக்கிறது.
ஆனால், இங்கு ஒரு சுயமரியாதைப் போராளியின் நினைவு நாளை கடைப்பிடிக்கச் சென்ற மக்களை, எந்தக் காரணமுமின்றி (எட்டுப்பேரை) சுட்டுக் கொன்றிருக்கிறது அதிமுக அரசு. தமிழக அரசு ஒப்புக்கொண்ட எண்ணிக்கை இது. ஆனால், இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். சுட்டுக் கொல்லப்படும் அளவுக்கு இம்மக்கள் என்ன குற்றத்தை செய்து விட்டனர்? தாங்கள் ஏற்றுக் கொண்ட ஒரு தலைவருக்கு (சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடான இம்மானுவேல் சேகரனின் 54 ஆவது நினைவு நாள் 11.9.2011) மரியாதை செய்ய – ஆண்டுதோறும் எழுச்சியுடன் பரமக்குடியில் சங்கமிக்கின்றனர். இதைச் செய்பவர்கள் தமிழர்கள்தான் எனினும், அவர்கள் இத்தமிழ்ச் சமூகத்தின் பார்வையில் கீழ்ஜாதியினர். அவர்கள் இந்த ஜாதியில் பிறந்து விட்டனர் என்பதைத்தவிர, அவர்களை சுட்டுக் கொல்வதற்கு இந்த அரசுக்கும், காவல் துறைக்கும் வேறு எந்த முகாந்திரமும் இல்லை.
விலங்குகளை சுட்டுக் கொல்வதற்குக்கூட, இந்த நாட்டில் ஆயிரம் நிபந்தனைகள் உண்டு. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டுக் கொல்வதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என்பது எவ்வளவு கொடூரமானது. நாயும் பன்றியும் தெருவிலே நடப்பதற்கும், குரைப்பதற்கும் இங்கு எந்தத் தடையுமில்லை; அது அவற்றின் பிறப்புரிமை. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் சாலையோரத்தில் கூடி நின்று, தங்கள் எதிர்ப்பைக் காட்டும் முகமாக கத்தக்கூட உரிமை இல்லை. இது, ஜனநாயக நாடு என்று சொல்வதற்கு இந்த அரசும், சமூகமும் வெட்கப்பட வேண்டாமா?
தாமிரபரணி படுகொலைக்கு அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனால் என்ன நீதி கிடைத்துவிட்டது என, எல்லாரும் விசாரணை ஆணையம் வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர் என்று தெரியவில்லை. சட்டப்பேரவையில் முதலமைச்சர் அளித்த அறிக்கையின் நகலாகவே அந்த ஆணையம் செயல்படப் போகிறது. அடுத்த சடங்கு, நிவாரணம். தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்கு ஆளாளுக்கு 1 லட்சம், 3 லட்சம், 10 லட்சம் என விலை பேசுகிறார்கள். தாழ்த்தப்பட்ட  மக்கள் சோற்றுக்காகப் போராடவில்லை; இன்றளவும் அவர்களின் போராட்டம் சுயமரியாதைக்கானது என்பதைப் புரிந்து கொள்ளாத – சுரணையற்றவர்கள் மத்தியில்தான் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும், அரசு தேவேந்திர மக்களின் உயிருக்கான விலை பிச்சைக் காசு ஒரு லட்சத்திற்கு மேல் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது. கீழ் ஜாதிகளுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிகளைக் கண்டித்து, சாகும்வரை யார் உண்ணா நோன்பு இருக்கப் போகிறார்கள்?
மரண தண்டனைக்கு எதிராக தமிழகம் ஆர்த்தெழுந்திருக்கிற தருணமிது. மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் போடும் அதிமுக அரசு, அதைவிடக் கொடிய – எந்த விசாரணையுமின்றி நிறைவேற்றப்படும் மரண தண்டனையான போலிஸ் துப்பாக்கிச் சூட்டை கண்டிக்காமல் (இந்தக் காவலர்களை இடைநீக்கம்செய்யக் கூட தயாரில்லை) ஆதரிக்கிறது எனில், இந்த அரசு நிறைவேற்றிய மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் போலியானது அல்லவா?
நிவாரணம் பற்றிப் பேசுகிற எவரும் தென்மாவட்டங்களில் உள்ள ஓர் ஆதிக்க சாதி, இக்கலவரத்தின் பின்னணியில் செயல்படுகிறது என்பதையும், அச்சாதியினர் பெருமளவில் குறிப்பாக காவல் துறையில் சாதி ஆதிக்க உணர்வுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் சொல்வதற்கு திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். வெறும் நிவாரணங்களோ, உண்மைகளைக் கண்டறிவதோ மட்டும் வரவிருக்கும் கலவரங்களைத் தடுத்துவிடாது. தேவேந்திரர் மக்களுக்கு எல்லா துறையிலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை; இம்மக்களுக்கு தொடர்ச்சியாக கடும் அநீதி இழைக்கப்படுகிறது என்ற பேருண்மையைப் பற்றி பேச இங்கு எவருமில்லை.
நெடுங்காலமாக பிரிந்து கிடந்த தேவேந்திரர் சமூகங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக தியாகி இம்மானுவேல் சேகரனின் வழிபாடு நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைய முற்படுகிறது. அதைத் தடுக்க ஆதிக்கவாதிகள் நினைத்ததின் விளைவுதான் இது. அதற்காக அவர்கள் செய்த திட்டமிடலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலியாயிருக்கின்றனர். இதோடு நின்று போய் விடவில்லை. அந்த மக்களை துன்புறுத்த அடுத்த கட்ட நகர்வுகளும் ஆரம்பித்தாயிற்று. ஆம் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு என்பதன் பொருள் என்ன?.
7 குடும்பங்கள் ஏற்கனவே அனாதை ஆக்கப்பட்டு விட்டது. அடுத்து 1000 குடும்பங்கள் பொய் வழக்குகளுடன் அவதிப்பட வேண்டும். அதற்கான வேலைகளில் காவல்துறை கச்சிதமாக இறங்கிவிட்டது; ஆம்  கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. படிக்கும் அப்பாவி இளைஞர்களும், விவசாய வேலை செய்யும் சமூக மனிதர்களும் கைது பயத்தில் இருக்கின்றனர். ஆனால் அரசும், ஊடகங்களும் இதையெல்லாம் சொல்லாமல் வேறு திசை நோக்கி திரும்பி தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்ளும். வழக்குகளுடனும், கலவரக்காரர்கள் எனும் பட்டத்துடனும் அம்மக்கள் வாழவேண்டும்.
அடுத்தவன் உழைப்பில் வாழும், அடுத்தவனை மோசம் செய்து வாழும் எல்லோரும் நலமாக இருக்கையில், உழவு செய்து, வருந்தி உழைத்து வாழும் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த கதி; கலவரக்காரர்கள் எனும் பெயர்?
இதன் மூலம் வர்க்க குணம் கொண்ட ஆதிக்க சாதியினருக்கு கொண்டாட்டம், சந்தோசம். நமக்காக‌ அரசியல்வாதிகளோ, அரசு ஊழியர்களோ, ஊடகங்களோ, சமூக வியாக்கியானம் பேசுபவர்களோ வரப்போவதில்லை. எல்லாம் நடந்த பிறகு சமாதானம் எனும் பெயரில் வரும் புல்லுருவிகள் யாரையும் அனுமதிக்காதீர்கள். நாம்தான் நமக்காக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். இனியாவது சிந்திப்போம்.. கற்போம், ஒன்றுசேர்வோம் புரட்சி செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக