ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?



கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல மதுரைக்கு தெற்கே ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் முத்துராமலிங்க தேவருக்கு விழா எடுக்கிறார்கள். அதற்கு ஆயிரக்கனக்கான போலிஸ் பாதுகாப்பு, இது கடந்த 15 - 20 ஆண்டுகளாக புதிதாக புகுத்தப்பட்டு நடைபெறும் ஒரு சாதி சார்ந்த விழா. முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி சார்ந்த சமூகத்தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருடைய சமூகம் அவருக்கு விழா எடுக்கிறது, அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் அந்த கூ(ட்ட)த்தின் கைவரிசையில் மதுரையில் இருந்த அம்பேத்கார் சிலை உடைபெற்றிருக்கிறது. தேவர் ஒரு மாநிலத்திற்குள், ஒரு சாதிக்குள் தன்னை குறுக்கிக் கொண்டவர். தேவரை எந்த வகையிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வு பெற்றவர் அம்பேத்கார், மேலும் அவர் ஒரு தேசிய தலைவர். தேவரை போற்றுபவர் தேவரை மட்டும் போற்ற வேண்டியதுதானே. எதற்கு அம்பேத்கார் சிலைமீது கை வைத்து ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் ?

அங்கு நடைபெறும் தேவர் விழா என்பது வெள்ளிடை மலையாக ஒரு குறிப்பிட்ட சாதி விழா என்றே தெரிகிறது, ஓட்டு வங்கி குத்தகையை தக்கவைத்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு செல்ல அரசியல் வாதிகள் குறிப்பாக ஜெ, கருணாநிதி போன்றோர் படையெடுத்துச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த விழா விளம்பரப்படுத்தப்படுவதையும், அதற்கு முதன்மைத்துவம் கொடுத்து செய்திதுறைகள் கூட படங்களை வெளி இடுவதைப் பார்க்கும் போது தென் மாநில, தமிழக சாதி அரசியலும், சாதி வெறிகளும் ஒழிப்பதற்கு இந்த நூற்றாண்டிற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தெரியவில்லை.

பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா ? என்று நினைக்கத்தான் செய்யும். தங்கள் சாதியையும் முன்னிலை படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழர்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவர். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது, ஆனாலும் சாதி வெறி வளர்ந்தால் மக்கள் தீவு கூட்டங்களாக மாறிப் போய்விடுவர்.

இஸ்லாமியர் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று இந்துத்துவ வாதிகள் நல்வழி(?) காட்டுவதைப் போலவே அடுத்த சாதிகாரர்களிடம் வியாபாரம் செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மனநிலைக்கு சாதி வெறி இட்டுச் செல்லும். இன்றைய தேதியில் சாதியை வளர்க்க மறைமுகமாக பாடுபடுவது அரசியல்வாதிகள் தான். முதல்வர் பதவிக்கு அனைத்து சாதி/மத பெருமக்களும் தான் வாக்கு அளித்து இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. போன்று பட்டியல் எழுதி மாளாது.... இவர்கள் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாள்தோறும் ஒரு சாதி தம் தலைவருக்கு ஜெயந்தி விழா எடுத்தால் ஜெ, மற்றும் கருணாநிதி சென்று வருவார்களா ? நிச்சயம் முடியாது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு இவர்கள் சென்று வருவதன் மூலம் குறிப்பிட்ட சாதி(வெறி)யை வளர்க்க இவர்களும் சேர்ந்தே பாடுபடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது. எந்த கட்சித்தலைவர் அந்த சாதிக்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ள நடக்கும் 'போட்டோ' போட்டி போலவும் தெரிகிறது.

அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக